அறுபதாம் வயதில் இருபதாகிறது காதல்

பதின் வயதுகளில்(teenage) மிகுதியான நிகழ்வுகள் பெரும்பொழுதுகளால் கட்டமைக்கப்பட்டவை, ஏனோ இருபத்திய வயதுகளில் நிகழ்வுகள் சிறுபொழுகளில் மட்டுமே கட்டமைக்கப்படுகிறது. பதின் வயதின் பள்ளி, கல்லூரி காலங்களில் கடிகார நொடி முள் அதற்கென உரிய நேர இடைவெளியில் துடித்து நகர்வதுண்டு, அதனால் நீண்ட பள்ளி, கல்லூரி வருடங்கள், நெடும் நாட்களுக்கு பார்த்து பழகக் கூடிய முகங்கள் என அமையும். ஆனால் இருபத்திய வயதுகளில் நம் கடிகாரத்தில் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு இடைவேளை இன்றி நொடி முள்ளை இரட்டைச் சக்கரம் கொண்டு ஓட வைக்கிறது.

 

எவ்வளவு செய்தாலும் ஏதோ மீதம் இருப்பதைப் போன்ற பரபரப்பு, கடல் சூழ் தீவென நம்மைச் சூழ்ந்து கொள்ள தொடங்குகிறது.இறுதி நிமிடங்களுக்கான பரபரப்பு ஆரம்பத்திலயே நமக்கு வந்திருக்கு.

 

அந்தப் பரபரப்பு, தனிமை, கூட்டம், தோல்வி, வெற்றியென, வீழ்ந்து எழவதென, நிராகரிப்பதும் ஏற்றுக்கொள்வதுமென தேடிச் செல்லும் தருணமிது எனக்கு இது…. மனம், மணம் என பல முடிவுகளின் தொடக்கமென தொடங்குகிறது இருபத்திய ஐந்தாவது வயதுகள்,
எல்லோரையும் போலவே எனக்கும் அவ்வாறே.

சமீபத்தில் நான் பார்த்த மற்றும் படித்த இரு நிகழ்வுகள், மணம், மனம், காதல் பற்றிய பொய் பிம்பங்களை உடைத்துத் தள்ளியது எனச் சொல்லலாம்.

 

நிகழ்வு 1:
கடந்த 40 ஆண்டுகளாக, 30 வயதைத் தாண்டிடாத முதுபெரும் இளைஞர் இவர், காதலுக்கு அடைமொழியாக இவர் பெயர் சொல்வதும் உண்டு. இவர் பெயர் தெரிய இன்னும் சில வரிகள் பயணிப்போம்,

சமீபத்தில் அந்த மாபெரும் நடிகரை அருகில் சந்திக்கக் கூடிய வாய்ப்பு, மருத்துவனையில் open wardல் ஒரு முனையில் அவரும், மறுமுனையில் எனது நண்பரும் அமர்ந்திருக்க, எனது நண்பர் அவர் அம்மாவின் பரிசோதனைக்காக வந்திருக்க, ஆதர்ச நடிகரின் அருகில் இருந்தும் அருகில் சென்றிட முடியாத நிலையில் எம் நண்பர். சிறிது நேரத்தில் செவிலியர் இருவர் கசங்கிய பூவைப் போன்ற பெண்ணொருத்தியை தாங்கி வந்து கதவைத் திறக்கையில் அந்த நடிகர் தானே முன் ஓடிச் சென்று கரம் பற்றிக் கொள்கிறார். அந்தப் பெண் கேன்சருடன் போரடிய காலமது. அவர்கள் நடந்து செல்ல கஷ்டப்பட்டது போல் தோன்ற நண்பர் ஓடிச் சென்று அந்த நடிகரிடம் உதவிக்கு வீல்சேர் கொண்டு வரவா எனக் கேட்க.,

அதற்கு அந்த நட்சத்திர நடிகரின் பதிலை அந்த நிகழ்வில் இருந்த நண்பரின் வரிகள் வழியே இங்கே,

“வேண்டாங்க! நன்றி.. இப்படி அழைத்துச் செல்வதுதான் இவருக்குப் பிடிக்கும் என்றவர் சற்றே நிறுத்தி என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி, எனக்கும் பிடிக்கும் என்றார்.

அன்று இரவு நண்பனிடம், எத்தனை வயதானால், எத்தனை இலக்கியம் படித்தால் இப்படியொரு காதல் எனக்கு வரும்னு தெரியலைடா என்றேன்.

அம்மி மிதித்து, அக்னி சாட்சியாகக் கைப்பிடித்த மனைவியை பொது இடத்தில் கை நீட்டி அடிக்கும் அற்பர்களும், ஐம்பது பவுன் வரதட்சணை கொண்டு வந்த மனைவியை ஐந்து பவுன் கூட வாங்கிவரவில்லை என தீவைக்கும் அயோக்கியர்களும் வாழும் சமூகத்தில், தாலிக் கட்டாமல் ஜஸ்ட் உடன் இணைத்துக் கொண்டு வாழும் ஒரு பெண்ணை அவரின் நோய்க்காலத்தில் பேணிப்பாதுகாத்த அந்த மனிதனை இந்த நூற்றாண்டின் மகத்தானக் காதலன் என்பேன்.

பின்னாளில், அதே துணைவி பெருத்த ஏமாற்றமளித்துச் சென்றபோது, அது குறித்து ஒரே ஒரு வார்த்தை கூட யாரிடமும் புகார் சொல்லாமல், தான் பிரதிபலன்பாராமல் அளித்தக் காதல் குறித்துப் புலம்பாமல் மவுனம் காத்த அந்த மனிதனை மகத்தான பெருந்தன்மையாளன் என்பேன்.” இவ்வாறாக நண்பர் ஒருவர் நிகழ்வை விவரித்திருந்தார்.

யாராயினும் ஒரு நாள் நம்மைப் பிரிவதுண்டு, அதன் புரிதல் தான் யாவருக்கும் இருந்திடுவதில்லை…

 

 

நிகழ்வு 2:

பயணங்களை தூரங்களை கொண்டில்லாமல், நம் மனதின் நினைவுகளில் இருக்கும் நாட்களைக் கொண்டு அளந்திட வேண்டும்… அப்படியான ஒரு பயணம் எனக்கும் சமீபத்தில் அமைந்தது,
ஆறேழு பேர் என நாங்களும் ஏறக்குறைய ஐம்பது வயதையொட்டிய ஒரு கணவன் மனைவியும் பயணித்தனர், சென்னை தொடங்கிய அந்த இரயில் பயணம் இரவுகளை துரத்திக் கொண்டு கோயம்பத்தூர் நோக்கிச் செல்லத் தொடங்கியது.

IMG_20180327_193318.jpg

இடைப்பட்ட பேச்சுகளில் அந்த இருவருக்கும் எங்கள் வயதையும், வாழ்க்கையையும் ஒட்டிய ஒரு மகன் அவர்களுக்கும் இருப்பதும் அவருடைய மனைவியின் மருத்துவ பரிசோதனைக்காக சென்னைக்கு வந்து செல்வதும் தெரிய வந்தது.

இன்னது அடுத்து வேண்டுமென அப்பயணத்தில் அவரது மனைவி கேட்டிடவில்லை, என்ன வேண்டுமென அவரும் கேட்டிடவில்லை. உளறல் மொழிக் காதலை விட அவர்களிருவர் உணர்தல் மொழிக் காதல் திருப்தியென உள் மனம் தொட்டது. மேடை தேடா உண்மையென அவ்விருவர் ஆர்பாட்டமில்லா காதல் அழகென்றானது.

இவர்களிருவரைப் பார்க்கையில் இனம் புரியாத உணர்வு என்று காதலைச் சொல்லிட முடியாது, இருவரும் இருவரையும் உணர்தலே காதல் எனச் சொல்லிடல் தகுமோ எனத் தோன்றிற்று…

ஆயிரமாயிரம் மொழிகளில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் காதல் என்ற ஒற்றை வார்த்தைக்கு மட்டும், இப்படியாக இருந்தாலும் இன்னும் சொல்லிட மிச்சம் வைத்திருக்கிறது இனிவரும் காதலர்களுக்கும், கவிஞர்களுக்கும்…

 

கொண்டவளைக் கொண்டாடும் கொண்டவரை,கொண்டாடிட மனம் வேண்டும்…

முதலில் நாம் படித்த நடிகர் கமலஹாசன்,
இரண்டவதாக பயணித்தவர் பெயர் கேட்கவில்லை…

எப்போ பக்குவப்பட்ட காதல் தொடங்க ஆரம்பிக்குதோ அப்போ உலகம் அதைப் பத்தி பேசுறது இல்லை, 40 வயதில தொடங்குற வாழ்க்கைக்கு 60 வயதுல அதோட காதல் 20ங்குற இளமைய அடையுது…

நல்ல வேளையாக ஞாபகம் வந்துச்சுங்க, நாங்க இப்போ போயிட்டு வர்றது நிஜமான மாப்பிள்ளையாகிப்போன கோயம்பத்தூர் மாப்பிள்ளைய பார்த்துட்டு வர்றதுக்கு… அது ஏனோ, கல்யாண பேச்செடுத்த இந்த பேச்லர் lifeல மட்டும் சுத்தி நடக்குறது எல்லாம் கல்யாணமா மட்டும் தான் இருக்கு….

ஊரார் மக்களுக்காக, பெண் பார்த்தல் பெரும் குற்றமென கூறிய குடும்பங்கள், பெண் பார்த்திருந்தால் சொல்லுப்பா எங்களுக்கு வேலை மிச்சமென சொல்லுமளவிற்கு தம் மக்கள் மனங்களை பார்க்க இருபத்தியோராம் நூற்றாண்டில் ஆரம்பித்து விட்டனர்…

சந்தை மயமாக்கப்பட்ட நம் சந்தோசத்தால, நம்ம ஊர்ல இருக்க நாய்குட்டி கூட நம்மள விட அதிக சந்தோசமா இருக்குதோன்னு தோணிடுது அந்த நாய்குட்டி கூட இருக்குற கொஞ்ச நேரத்தில்…நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் அறிவாளித்தனத்தையே அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறோம் நாம. நம்ம கூட Materialism நிறைந்திருக்கிற வரைக்கும் நம்மையறியாமல் நம்மள சந்தைப்படுத்துதல் சகஜமான ஒன்னாகத் தான் இருக்கப் போகுது. Minimalism life style நமக்கு எட்டிப் பிடிக்குற தூரத்துல இருக்க எட்டாக் கனியாகத் தான் இருக்கு.

சில பயணங்கள் நாம எதிர்பார்த்தத விட நல்ல இடத்தில நம்மளை கொண்டு போய் சேர்க்கும், அப்படித்தான் அந்தப் பயணம் எனக்கும் இருந்துச்சு. அவங்களை பார்த்து கற்றுக் கொள்ள நிறைய இருக்குனு தோணின அந்த நேரம், ரொம்ப நாளுக்கு அப்புறம் சின்னப் பையன் போல என்னை நான் உணர வச்சிச்சு.

In the தேடல் of permanent roommate இதுவும் கடந்திட போகும்…

நன்றி : SKP Karuna Blog for Kamal hassan incident

OMR #00.00 AM 

எல்லா நாட்களைப் போலவும் இல்லாத அந்த நாளுக்கு இருந்தது விடியல் இரண்டு.

24 மணி நேரம் கடிகாரத்துல இருந்தாலும், அதில் நாம் நாமாக இருக்கிறது பத்துப் பனிரெண்டு மணி நேரம் மட்டும் தான். மற்ற நேரங்களில் நமக்கான தயார்படுத்தலில் தாராளமாக்கப்படுகிறது.

ஒரு அல்லது ஒவ்வொரு நொடி நேரத்திற்கான மதிப்பு எல்லா நேரத்திலும் நம்மிடமிருந்து கிடைப்பதில்லை. ஆனால் அந்த இரவில் எனக்கது எதிர்மறையாய் அது இருந்தது.

சமீபத்திய நிகழ்வுளில் மிகத் தாமதமான இரவாக எனக்கது இருந்தது.

ஏன் “லேட்” ங்குற கேள்விக்கு பதில் என்னிடம் இருந்து தான் வந்தாக வேண்டுமென்பதாலோ என்னவோ , ஏன் லேட் ங்குற கேள்விய எனக்குள்ள திரும்பத் திரும்ப கேட்டுக்கிறதுக்கு பதிலாக அந்தக் கேள்விக்கான பதிலை தேடிய நேரமது.

கேள்வியும், அக்கேள்விக்கான பதிலும் நாமாகவே இருப்பது, இரு முனை கூர் கத்தி போன்றது. முட்டாள் கேள்வியோ, முட்டாள் பதிலோ அவ்விரண்டில் எதாவதொன்று நிகழ்ந்தால் பொருளற்றுப் போய் விடும் அவ்விரண்டுமே.

அன்றிறவு அலுவல்களுக்கிடையே கிளம்பி வரும் போது இரவு நேர மணி பத்தும் எனக்குப் பத்தாமல் போயிருந்தது.

அன்றைய நாளின் கடைசி ரயில் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். சென்னை கடற்கரை டூ வேளச்சேரி என்ற நீண்ட நெடும் பயணத்தில் நான் நடுவில் ஏறி கரையோரம் தரை காண்பது போல் மயிலாப்பூர் முதல் திருவான்மியூர் வரையிலான தொடர் பயணமது, சில நேரங்களில் பயணமும் ஒருவகை மதுவே.

முன்னோக்கி போகிற ரயிலில் இருந்து, நினைவெனும் படகில் பின்னோக்கி துடுப்பு வீசுவதும் அன்றாட வாழ்வியலின் வயலின் மெல்லிசை அது.

மௌனம் மிகப் பெரிய சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தது.

மொத்த ஊரும் என்னுடன் பயணிக்கிற மாதிரி இருக்கும் ரயில் பயணங்களின் விதிவிலக்கா அன்றிரவுப் பயணத்தில் நிறைய காலிப் பெட்டிகள் மட்டும் என்னுடன் பயணித்தது.

வழிப்போக்கன் வழித் தடமாய் நகர வாழ்க்கை,
கால் கறைய அவ்வழி சென்றுவந்தாலும் நடந்தவன் மனதிலோ, நடந்த மண்ணிலோ தத்தம் தடயங்கள் மீளப் போவதில்லை.

திருவான்மியூர் வந்து சேர்ந்த போது ஏறக்குறைய 10.40 ஆகியிருந்தது.

அடுத்த நாளுக்கான பத்திரிகை தலைப்புச் செய்திகள் தயாராகியிருக்கக் கூடிய நேரம் அது.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில், ட்ராபிக்கில் நிற்பது மட்டும் ஆறு மாத காலங்கள் அவனுடைய மொத்த வாழ்நாளில் கணக்கிடும் போது என்ற செவி வழிச் செய்தி ஒன்றுண்டு. டைடல் பார்க் மாதிரியான சிக்னலில் சிக்கத் தவிப்பவர்களுக்கு ஓரிரு மாதங்களை கூட்டிச் சொல்லுமளவிற்கு நெருக்கடியில் சிக்கிப் பிறந்த நகரக் குழந்தை அது.

அப்படியான டைடல் பார்க்கும் இளைப்பாற தன்னை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது போல் இருந்தது அந்த ஆரவாரமற்ற முன்னிரவில்.

பயணத்தின் பிற்பாதி டைடல் பார்க்கிலிருந்து காரப்பாக்கம் வரை நீண்டது. நாம் செல்ல வேண்டிய திசைக்கு எதிர் திசையிலேயே எல்லாப் பேருந்தும் அடிக்கடி செல்வது போல பெரும்பாலும் தோன்றும், ஆனால் அவ்விரவில் அப்படி எதிர்திசையில் கூட அடிக்கடி செல்லும் பேருந்துகள் இல்லை.

பதில் இல்லாத கேள்விகள் இல்லை என்பதுபோல் எனக்கான அப்போதைய பதிலாக ஒரு பஸ் வந்து சேர்ந்தது. இருக்கைகளுக்கு துணையாய் நான் அமர்ந்த தனிமையது.

சிறிய ஒளிகளில் சிதறாதமல் விழுந்ததென் விழிப்பிம்பம். அங்கங்கு விழி திறந்திருந்த விளக்குளால் அந்த இரவின் அரைத் தூக்கம் மங்கலாகத் தெரிந்து கொண்டிருந்தது.

வண்டியில் ஹார்ன் இருந்தாலும், அதைப் பயன்படுத்தாமல் தன் தொண்டையை ஹார்னாக்கி முன் நின்ற வண்டியை விரட்டிச் சென்ற விசித்திர மனிதர்களை அடையாளம் காட்டியது அந்த இரவு.

காரப்பாக்கம் சென்றடைய ஏறக்குறைய 11.30 ஆகி இருந்தது.

ருசிக்காக உணவகம் தேடாமல் பசிக்காக தேடிய நேரமது. இதற்கு முன் ஒரு சில முறை அந்த உணவகத்தில் உட்கொண்டிருந்தாலும் இம்முறை சற்று வித்தியாசப்பட்டது அன்று பரிமாறிய உணவிலும், பரஸ்பரம் மாறிய உணர்விலும்.

அங்கு நடந்ந மொத்த நிகழ்வை, பொரியல் அளவில் பரிமாறுகிறேன்.

நேரம்:

நான் நானாகா, உணவகத்தின் உரிமையாளர் இரண்டாமவராக, அவரின் நண்பராக அவர் இருக்கலாம் என்று யூகிக்கக் கூடிய நிலையில் மற்றொருவர் மூன்றாமவராக அங்கு.

நானறிந்த வரையில் இரண்டாமவர் நுட்பம் தெரிந்த உணவக உரிமையாளர்.

பெரும்பாலானோர் சொல்வது போல நானும் ஒரு காலத்தில் என அவரும் அந்த சந்திப்பில் மூன்றாமவரான அவரது நண்பரிடம் சொல்லிய போது தான் தெரிந்தது வெகு சில நாட்களுக்கு முன்பு மட்டுமே அவர் சமைக்க கற்றுக்கொண்டார் என்று.

இதற்கு முன் சில முறை அவரிடம் பேசியிருந்தாலும் அது இரண்டு தோசை அல்லது மூன்று இட்லி என்ற சிறிய அளவிலேயே இருந்தது, ஆனால் அன்று ஏனோ சற்று நீண்டது.

இதுவரை எந்த ஹோட்டலில் என்னிடம் கேட்காகத கேள்வியை அவர் கேட்டார்.

டேஸ்ட் எப்படி இருக்கு தம்பி?

அவர் கேள்வியால் சுவை கூடிப் போன உணவாகிப் போனது அப்போது.

எப்பவும் இருக்குற டேஸ்ட்ட விட இன்னைக்கு அதிகமாக இருக்குன்னா ! என்று சொல்லி திருப்திகரமாக முடிந்தது அன்றைய இரவு நேர உணவு.

சற்று மங்களான அவ்விரவில் அவர் ஏனோ வெளிச்சமாகத் தெரிந்தார்.

இரவின் காற்றில் இரக்கமான மனம் அதிகம் கலந்திருக்குமோ என்னவோ, பரவிய இடங்களில் இறுக்கமானவங்களையும் இளகிய மனங்களாக மாத்திடுது . அன்று ரயிலில், பேருந்தில், ஹோட்டலில் என என் நினைவிலிருந்த அத்தனை பேர்களையும் முகமூடி அற்ற அகமுடையவர்களாக காட்டியது. அந்த முகங்கள் அந்த இரவின் அடையாளம் என ஆகிப்போனது.

வறண்ட வானத்து பூமி, இருண்ட நிலவொளியில் உயிர் பிடித்து விண்மீன்களாய் விளைத்திருந்திதது.

தூரிகை இமைகளால் அவ்விரவு இன்னுமின்னும் அழகாகிப் போனது.

இறுதியாக என் இடம் சென்று சேர்ந்த போது நேரம் அதற்கடுத்த நாளை ஆரவாரமில்லாமல் ஆரம்பித்துக் கொண்டிருந்தது அந்த 00.00AMல்.

நாம் காணும் இரவில் நட்சத்திரங்கள் அதிகமாக இருப்பதனாலோ , ஒற்றை நிலாவை நின்று பார்க்கிற நாம் , நட்சத்திரங்களை கவனிக்கத் தவறி விடுகிறோம். இப்படியாக நாம் கவனிக்க மறந்த இரவுகளாயிரம். 

சிறந்த மனிதன் எங்கு இருப்பான் என்பதற்கு இறந்து போனவர்களில் ஒருவனாக அவனிருப்பான் என்று எங்கோ படித்தது இந்த இறந்து கொண்டிருந்த அந்நாளும் சிறந்ததென்று மீதமில்லா அந்த இரவின் இறுதியில் புரிதலானது.

இது நடந்து சில மாதங்கள் கடந்திருந்தாலும் அதற்குப் பிறகு அப்படி ஒரு இரவோ, பயணமோ இன்னும் அமையவில்லை.

இறுதியாக அந்த இருளிரவில் நான் பார்த்ததை விட தேடியது அதிகம் – இல்லை என்பதால் இருக்கும் இருளும் ஓர் உண்மையின் இருப்பிடமே.

இரவின் பார்வையில் இவ்விரவைப் பற்றி, நண்பர்கள் அற்ற இரவிற்கு ரசிகர்கள் அதிகம்.
A poetically composed journey.

இருபத்தைந்தில் நான்

எனதிந்த இருபத்தைந்தாண்டுகள் பற்றியும், நான் என்னைச் சுய விமர்சனமும், சுய மதிப்பீடும் செய்து கொள்வதற்கான முயற்சி இந்தப் பதிவு. பதிவில் சுயபுராணம் வெகுவாகப் பரவிடக் கூடாதென்ற சுயவிமர்சனத்துடனும், சுய எச்சரிக்கையுடனும் இவ்விடம் தொடங்குகிறேன். 
 

ஆவணப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியமான ஒரு காரியம் என்று எனக்குப் புரிந்தது மிகச் சமீபத்தில் தான். காட்டுத் தீ போல அடுத்தடுத்த தலைமுறை தலைமுறையாக பரவிவந்த கதை என்னும் வரலாற்று காட்டுத் தீ , நம் தலைமுறைக்குப் பிறகு தீயும் தன் தாகம் குறைத்து தனல் பூக்கத் தொடங்கிவிடுமோ என்ற பயம் கலந்த வருத்தம் உண்டு. 

வானம் பார்த்தபடி , மண் தரை விரிப்பில் அமர்ந்து , பாட்டிகள் அம்மாக்கள் மடியில் என் தலை சாய்த்து , நான் கேட்ட கதைகள் அப்போது நான் அன்னாந்து பார்த்த வானத்தை விட மிகப் பெரியது. 
கதை சொன்னதால் தானோ என்னவோ அவர்கள் எனக்கு அவர்கள் தாத்தாவாகவும், பாட்டியாகவும் தெரிந்தார்கள். ஒருவேளை அவர்கள் கதைகளே சொல்லியிருக்காவிடில் நமக்கவர்கள் வயதான கிழவர்களாகவும், கிழவிகளாகவும் மட்டுமே நாம் எண்ணியிருக்கக் கூடுமோ என்னவோ?…
அடுத்த தலைமுறைக்கு நம்முன்னோர் நமக்களித்த அறிவைக் கொண்டு சேர்க்கவில்லையெனில் நம் வரலாறோ அல்லது நம் இனமோ அழிந்து விடுமா என்று கேட்டால் இது அழிவின் முடிவல்ல இது அழிவின் ஆரம்பம் மட்டுமே என்று கூறலாம்.
நமது வரலாற்று ஆய்வுகளை நாம் சற்று ஆய்ந்து பார்த்தால் நம்மைச் சுற்றி நடந்த பெரும்பாலான அகழ்வாய்வுகள் அனைத்தும் அந்நியர்களால் நடத்தப்பட்டதே ஆகும். வரலாற்று ஆய்வு என்ற சுயபுராணம் மட்டும் நமக்குப் பிடிக்காமல் போனதன் காரணம் என்னவோ தெரியவில்லை. 
நாம் வரலாற்றிலிருந்து பெற்றுக் கொண்டதை விட , பெறாமல் விட்டதே அதிகம். 
ஒரு சமயத்தில் , நம்முடன் கி.மு வின் சமகாலத்தில் வாழ்ந்த நியண்டர்தால் என்னும் மனித இனம் இருந்ததற்க்கான சுவடுகள் வரலாற்றிலும், நம் ஜீனிலும் இல்லாமல் போனத இதற்கான உதாரணம். 

பாட்டி சொன்ன கதைக்காகவா இவ்வளவு உள் கதைகள் எனக் கேட்டால் ?, கதை சொல்வதும், கதை கேட்பதும் பொழுது போக்குக் காரியம் அல்ல. இன்னும் சொல்லப் போனால் இதுவும் ஒரு வகைப் பண்டமாற்றமே.

 
அது,இது என்ற ஐந்தறிவிலிருந்து அவர், இவர் என்ற ஆறறிவில் நாம் ஆட்சி செய்வதற்கு காரணம் கருத்துப் பரிமாற்றம் என்ற பண்டமாற்றமே. 

கொடுப்பதும்,பெறுவதும் பண்டமாற்றத்தின் காரியம் என்றால் இந்தக் கதைப் பண்டமாற்றத்தில் நமக்குக் கொடுப்பவர் நம்மிடமிருந்து பெறுவதில்லை, நம்மிடமிருந்து கதை பெறுபவர் நமக்கு கதையை திரும்பச் செலுத்தப் போவதும் இல்லை. இக்காரணத்தால் எக்கதையும் தொடர்கதை தானோ?
இருபத்தைந்து ஆண்டுகள் திரும்பிப் பார்க்க எண்ணிய நாம் , இப்போது கடந்து சென்றது இருப்பத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கும் மேல். ஆம் , நியண்டர்தால் மனிதன் நமக்கு ஆதி காலத்துப் பங்காளி அல்லவா. 

காரணம் மறந்த காரியமாக இந்தப்பதிவு நீண்டு விடக் கூடாதென்று இருபதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் ( அதாவது கி.பி 1992 ) ற்கு உங்களைக் கொண்டுவந்து உங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்.
1992 ல் இருந்து 2009 வரையான இடைப்பட்ட இந்தப் பதினைந்து வருடங்கள் என்னைப் பொருத்தவரை எனக்கான கற்காலம் அது. 

சிக்கிமுக்கிக் கல் கொண்டு வாழாமல், கல்லிலும் முள்ளிலும் சிக்கி விளையாடிய காலமது. 

பொதுவாக ஆண் பிள்ளைகள் பிறந்த சில வருடங்களுக்கு பெண் பிள்ளைகளாகவே அக்கம்பக்கத்திலிருப்பவர்களுக்கு தெரிவார்கள் போலும், சிக்காத முடியில் சின்னச் சிண்டும், நிக்காத பூவைத் தலையிலும் வைத்துக் கொண்டாடிய காலமது , என் கதையும் அதற்கு விதிவிலக்கல்ல. அன்று மடி தூக்கி வைத்த அத்தைமார்களின் செல்லமாக அன்று நான் செய்த சேட்டைகளை இன்று அவர்கள் சொல்லி நான் கேட்க்கும் போது வெட்கம் பிடுங்கித்தான் தின்றுவிடுகிறது. 

என் பள்ளிப் பருவத்தில் என்னுடன் பள்ளிக்குப் பேருந்து ஏறிய கௌரவ் என்னும் நாய் ( கௌரவ் : பெயர்க்காரணம், அந்த பள்ளிப் பருவத்தில் நான் பார்த்த ஏதோ ஒரு super hero தொடரின் முதன்மை கதாபாத்திரத்தின் பெயரது) . அடுத்து வந்த நாட்களில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தன்னுயிர் இழந்தது. இன்று வரை எனைப் பாதித்த இழப்புகளில் ஒன்று அது. 

பதினொன்றாம் வகுப்பில் சேர நேரும் போது, கணிதப் பிரிவு கடினம் என்று யாரோ சொல்லிய செவி வழிச் செய்திக்காக அக்கணிதப் பிரிவில் சேர மறுத்து அப்பள்ளியை துறந்து, அதன் பின் அருகில் படிக்க பள்ளியில்லாமல் மறுபடியும் அதே பள்ளியில் நான் அடம்பிடித்து சேராத முதல் குரூப்பில் என்னை விட அதிகமாக அடம்பிடித்து என்னை அதில் சேர்த்து விட்ட என் தமிழ் ஆசிரியரை இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் என் நெடும் பயணத்தில் நன்றி சொல்ல. நான் வைக்காத நம்பிக்கையை என்மேல் வைத்தவரல்லவா அவர்.

விவசாயக் குடும்பமும் , startup companyயும் கற்றுக் கொடுப்பதில் துரோணாச்சார்யா என்பதில் ஆச்சரியமில்லை. அவ்விடம் கற்றதை  மேலாண்மை பட்டப் படிப்புகள் கற்றுத் தர முடியுமா என்பது விவாதித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. 
நான் வேண்டாமலே எனக்கிந்த இரண்டும் அமைந்தது இனி வரும் காலங்களில் நான் செய்ய வேண்டிய செயல்களின் பலனோ என்றும் கூட எண்ணிப் பார்ப்பதுண்டு. 

எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறந்த ஒன்றென்றால் அது ஐயமில்லாமல் அருண்(Founder of “Me” & GUVI) என்ற அண்ணாவைச் சந்தித்தது என்பேன். எனக்கான முகவரியும், முதல்வரியும் எழுதியவரவரே. 
இன்றுவரை நான் பிரமித்து பார்க்கும் வெகுசில மனிதர்களில் அவர் ஒருவர். 
 கோயம்பத்தூரைக் நான் கூட கடந்து சென்றதில்லை அன்றென்னை அவர் சென்னைக்கு வரச் சொல்லிய போது. 
அவரிடமுருந்து நான் கற்றதையும், பெற்றதையும் பதிவேற்றினால் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் போல பல பகுதிகள் நீளும். 

காரணம் தெரியாத காரியமாக  இருந்ததாலோ என்னவோ என்னை பயிற்றுவித்த கல்வி சற்று சோம்பலாகிப் போனது, கல்லூரிக் காலத்தில் கண்டறிந்த காரணத்தால் எனை விற்க நான் தேடிப் பயின்ற காலமது. 
அலாவுதீன் விளக்கைத் தேய்த்து கிளம்பிய பூதமாய், எனைத் தேய்த்து அப்போது நான் ஒரு கண்டது எனைக் கொண்ட programming என்ற பெரும் பூதம். 

“நான்” என்ற இவ்விரு எழுத்தை நானாகச் சொல்வதற்கு ஏறக்குறைய இருபதாண்டுகள் பிடித்தது. 

MCAவிற்க்குப் பிறகான என் நாட்கள் தினமொரு மனிதனாய் எனக்கு என்னையே அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. அடிக்கடி எனக்கான அறிமுகத்தை மாற்றுமளவு நாடோடியாய் என் விருப்பத் தேர்வுகள் உள்ளது. 

எனக்கான என்னை, நான் protagonistஆக பார்க்க ஆரம்பித்ததே இருபதுக்கு பிறகு தான். 

25 ஆண்டுகள் எனக்கான கால்,அரை,முக்கால் வாழ் ஆண்டாக இருக்குமோ என்று யோசிக்காமல்,அது முக்கால் ஆண்டாகவோ அல்லது முழு ஆண்டாகவோ மாறும் வரை காத்திராமல் இப்போதிருந்தே உரியவர்களுக்கு என் மனம் சார்ந்த நன்றி சொல்வது சந்தோஷப் பட வைக்கிறது. 
இந்த 25ல் இழப்புகளை எண்ணிப் பார்த்தால் அது இழப்பாக மட்டும் தெரியாமல் நான் கற்றதும் பெற்றதுமாகத் தெரிகிறது, தடுமாற்றமெல்லாம் விபத்துகளில்லையே!

நானிழந்ததாயிரத்தில் சிறந்ததெதுவென்றால்?…

இனி வரும் இழப்புகளில் ஏதாவதொன்றிலதிருக்குமதென்பதிலிருக்கிறது இன்றுவரை இருந்ததின் சந்தோஷம்….என் தவறுகளும், சரிகளும் கற்றுக் கொடுத்தளவிற்கு வேறெந்தப் புத்தகமும் எனக்கான புரிதலைக் கொடுக்கவில்லை. 
இப்போதுள்ள மனநிலையில் எனக்கு வரப்போகும் தடுமாற்றங்களையும், விபத்துக்களையும் அழகாய்ச் சொல்வதெப்படி என்ற என்னத்திலே கரைந்து செல்கிறது அந்தச் Setback. 
இங்கு பதிவிட்ட பெரும்பான்மையான பகுதிகளை நீண்ட பத்திகளாகச் சொன்னால் பல பாகங்களில் சொல்ல வேண்டி வரும் , எனவே சுருங்கச் சொல்லி ஒருசில பக்கங்களில் சுருக்குகிறேன். 

வாசகா, ஓ வாசகா! 

என் சமகால சகவாசி,வாசி! 

புரிந்தால் புன்னகை செய். 

புதிரென்றால் புருவம் உயர்த்து. 

பிதற்றல் எனத் தோன்றின் பிழையும் திருத்து. 

எனது கவி உனதும்தான். ஆம், நாளை உன் வரியில் நான் தெரிவேன்.


-கமல்ஹாசன் 

என்ற கமல்ஹாசனின் கூற்றின் கடைசி வரியின் உருவம் என் எவ்வெழுத்திலும் தெரிவதாக என் சில வரிகள் கொடுத்த வாய்ப்புகளில் நினைப்பதுண்டு. 
தசாவதாரத்தின் முன்னுரையில் தொடங்கியது கமலின் எழுத்து மீதான முதலீர்ப்பு, அன்று முதல் ஏகலைவனாய் என்னுள் ஓருவன் கமல் என்னும் கவிஞனை நோக்கி. 


என்னெழுத்தின் திறனென்னவென்றால் நான் எண்ணத் துணிந்தவற்றை அதன் தன்மை குறையாமல் என் மை கொண்டெழுதத் துணிவதென் திறனென்பேன். 
இன்றுவரை நான் சேர்த்த சிறு பொற்குவியல் இதைப் படிக்கும் நீர் என்பது நீர்த்துப் போகாத உண்மை.
இவ்வளவு சொல்லியும் , எவ்வளவோ சொல்ல மீதமிருப்பதாய் ஓர் உணர்வு…

நட்புடன் 

நான்

ரகுபதி 

13-09-2017